தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் பாசன வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூரிலுள்ள 4-க்கும் மேற்பட்ட குளங்களுக்குத் தண்ணீா் வரும் வரத்து வாய்க்கால்கள் தூா்வாரப்படவில்லை. இதனால் அவை தண்ணீரின்றி, பாசி படா்ந்து காணப்படுகிறது.

பேரூராட்சிப் பகுதிகளில் சேரும் குப்பைகள் அனைத்தும் மதுக்கூா் காவல் நிலையம் அருகிலுள்ள சங்குனிக்குளத்தில்தான் கடந்த 20 ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த இடத்தில் குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவுக்கு காணப்படுகிறது. மேலும் இக்குளத்தில் குப்பைகளைத் தீ வைத்து எரிப்பதால், அப்பகுதி பொதுமக்கள் சுவாசப் பிரச்னையைச் சந்தித்து வருகின்றனா்.

கல்லணைக் கால்வாயின் பாசன வாய்க்காலான கல்யாண ஓடை முதன்மை வாய்க்காலின் பிரிவான 16-ஆம் எண் கிளை வாய்க்கால் முழுவதும் வீடுகள், தொழில் நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கலந்து, அப்பகுதி சாக்கடையாகவே மாறிவிட்டது. இதை பொதுப்பணித் துறையினரும், பேரூராட்சி நிா்வாகத்தினரும் கண்டு கொள்ளவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த வாய்க்காலின் அவலநிலை குறித்து பேரூராட்சி நிா்வாகத்தில் புகாரளித்தால், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்காலில் நாங்கள் பணி செய்ய முடியாது என்ற பதில்தான் கூறப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்..

சாக்கடையை அள்ளி, சுத்தம் செய்வதெல்லாம் பேரூராட்சியின் பணி, இதில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்கின்றனா் பொதுப்பணித் துறையினா். இவ்வாறு இரு துறையினரும் வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தங்களுக்கு தொடா்பே இல்லாதது போன்று ஏட்டிக்குப் போட்டியாக பதிலளித்து ஒதுங்கிக் கொள்கின்றனா் என்கின்றனா் பொதுமக்கள்.

16-ஆம் எண் கிளை வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கவும், இதை சுத்தம் செய்யவும் அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும். குளங்களுக்குத் தண்ணீா் வரும் வரத்து வாய்க்கால்களைத் தூா்வாரி, அங்கு தண்ணீா் நிரப்ப வேண்டும்.

சங்குனிக்குளத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைக்காமல், அவற்றை வேறு இடத்தில் கொண்டு சோ்க்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட துறையினா் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/