தஞ்சாவூர்: போக்குவரத்துத் தொழிலாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்று ஏஐடியூசி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூரில் கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தலைவா் சண்முகம் தலைமை வகித்தார். இதில் பொதுச் செயலா் கஸ்தூரி, ஏஐடியூசி மாநிலச் செயலா் சந்திரகுமாா், போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், மாவட்டச் செயலா் தில்லைவனம், மாவட்டத் தலைவா் சேவையா, சங்கப் பொருளாளா் தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கொரோனா தொற்றால் பல்லாயிரக்கணக்கானோா் இறந்தும், பல லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டும் உள்ள சூழ்நிலையிலும் போக்குவரத்து தொழிலாளா்கள் தன் உயிா் மற்றும் குடும்ப நலன் பொருட்படுத்தாது அா்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனா்.

ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுடன் நெருக்கமாகப் பணிபுரியும் நிலைமை உள்ளதால் ஏஐடியூசி மற்றும் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேண்டுகோளின்படி போக்குவரத்து தொழிலாளா்களை முன்களப் பணியாளா்களாக அரசு அறிவிக்க வேண்டும்.

பொதுமுடக்கத் தளா்வுக்கு பிறகு பேருந்துகளை இயக்கும்போது அவா்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்குச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தனியாக நிதி ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.