தஞ்சாவூர்: தஞ்சை அருகே சித்திரக்குடி மற்றும் ஆலக்குடி பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் தாளடி சாகுபடிக்காக நாற்று நடுதல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தொடர் மழையை பயன்படுத்தி சித்திரக்குடி மற்றும் ஆலக்குடி பகுதிகளில் விவசாயிகள் வயலை உழுது தாளடி சாகுபடியில் முனைப்பு காட்டி வருகின்றனர். குறுவை அறுவடை முடிந்து கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்து முடித்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் மழையால் நெல் நனைந்ததால் அவற்றை காய வைத்து கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கு டெல்டா மாவட்டங்கள் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் நிலங்களை இயந்திரங்கள் வாயிலாக உழுது நாற்று விட்டுள்ளனர். பலபகுதிகளில் நாற்று பறித்து நடும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் தாளடி நாற்று நடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சித்திரகுடி விவசாயி மகேந்திரன் என்பவர் கூறுகையில், தாளடி சாகுபடிக்காக நாற்று பறித்து நடும் பணிகள் நடந்து வருகிறது. தற்போதைய மழை விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இருப்பினும் யூரியா உரம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தனியார் உரக்கடைகளில் வேறு மருந்துகள் வாங்கினால் மட்டுமே யூரியா உரம் தருகின்றனர். இப்பகுதியில் கூட்டுறவு சொசைட்டிகளில் குறுவை சாகுபடியின் போதே யூரியா உரம் கிடைக்கவில்லை. இருப்பினும் குறுவை சாகுபடியை விவசாயிகள் சிரமப்பட்டு முடித்து அறுவடை செய்தனர். தற்போதைய தாளடி சாகுபடிக்காவது யூரியா உரம் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/