தஞ்சாவூர் அக் 08: தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்த 4 நாட்களே ஆன பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (24 ). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). கடந்த ஆண்டு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 5ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மாடி வார்டில் ஒரு பெண் அவருக்கு உதவி செய்வது போல் நடித்துள்ளார். கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமிக்கு உதவுவது போல் நடித்து அவருடனே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மீது ராஜலட்சுமி நம்பிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அந்த பெண் ராஜலட்சுமியிடம் நீங்கள் குளித்து விட்டு வாருங்கள், நான் குழந்தையை பார்த்து கொள்கிறேன் என கூறினார். இதனை நம்பி குளித்து விட்டு திரும்பிய ராஜலட்சுமி குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். அந்த பெண்ணையும் காணவில்லை. இதுகுறித்து ராஜலட்சுமி தன் கணவர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு குணசேகரன் மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்து பக்கத்து வார்டில் உள்ளவர்கள் உட்பட பலரிடம் விசாரித்துள்ளனர். இதற்கிடையில் ராஜலட்சுமிக்கு தன் கணவரிடம் அந்த பெண் குறித்து கூறினார். இது தொடர்பாக மேற்கு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் டிஎஸ்பி கபிலன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது உதவி செய்வது போல் நடித்த பெண் கட்டைபையில் குழந்தையை தூக்கி கொண்டு கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/