தஞ்சாவூர் நவ:16 -இந்தியாவிலேயே முதன்முறையாக, இந்திய உணவுக் கழகம் சார்பில் உணவு அருங்காட்சியகம் ரூ.1. 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு நேற்று பார்வையாளர்களுக்காக மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இந்திய உணவுக் கழகம் முதன்முறையாக தஞ்சாவூரில் கடந்த 1965-ம் ஆண்டு துவங்கப்பட்டு அதன்பிறகு நாடெங்கும் அலுவலகங்கள் திறக்கப்பட்டது. தஞ்சாவூரில் நிர்மலா நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் உணவு அருங்காட்சியகம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி சுமார் 2,500 சதுரஅடி பரப்பளவில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதில் பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் உதவியோடு, சுமார் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உணவுக்காக எப்படி வேட்டையாட துவங்கினான் என்பதில் தொடங்கி, உழவு கருவிகள், விவசாயம், உலகில் உள்ள தானிய களஞ்சியங்கள், உலகளவில் உணவு உற்பத்தியின் சவால்கள், பருப்பு வகைகள், காய்கறி பழங்கள், இந்தியாவில் உள்ள உணவு முறைகள், பொதுவிநியோகத்திட்டம், விவசாயத்தில் உழவு செய்வது முதல் நாற்றங்கால், நடவு, களை எடுப்பு, அறுவடை, கொள்முதல், அரவை, மக்களுக்கு அரிசியாக விநியோகம் செய்யும் இந்திய உணவு கழகத்தின் அத்தனை பணிகளையும் மெழுகு பொம்மைகளாக தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ளனர்.
இந்த அருங்காட்சியகத்தை நேற்று பொதுமக்கள் பார்வைக்காக மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல் மும்பையில் இருந்தவாறு காணொளி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்: இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இந்தியாவிலே தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடுகளை செய்த இந்திய உணவு கழகத்தினரை இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். இறக்குமதியாளர் முதல் ஏற்றுமதியாளர் வரை உணவுப் பாதுகாப்பின் மூலம் தேசத்தில் விவசாயப் புரட்சியை இந்திய உணவு கழகம் வெளிப்படுத்தி வருகிறது. சமூகத்தில் ஏழைகள் மற்றும் சலுகைகள் கிடைக்காத பிற பிரிவினருக்கு இந்திய உணவு கழகம் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்றார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியி்ல் தென்மண்டல செயல் இயக்குநர் டல்ஜித்சிங், முதன்மை பொது மேலாளர் சஞ்சீவ்குமார் கவுதம்,தமிழக பொது மேலாளர் பி.என்.சிங், தஞ்சாவூர் மண்டல மேலாளர் தேவேந்திர சிங் மார்டோலியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த அருங்காட்சியலம் அலுவலக வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகத்தில் ப்ரொஜெக்சன் மேப்பிங், டச் ஸ்கீரின் கியோஸ்க், ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் போன்ற நவீன தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும், இந்திய உணவு கழகத்தில் செயல்பாடுகள் குறித்தும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/