தஞ்சாவூர் நவ 22: தஞ்சை மாவட்டத்தில் 70 சதவீதம் பேருக்கு பயிர் காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை – குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு: தஞ்சாவூர், நவ.22- தஞ்சை மாவட்டத்தில் 2020 – 2021க்கான பயிர் காப்பீட்டுத் தொகை 70 சதவீத பேருக்கு கிடைக்கவில்லை என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமார் தலைமையில் காசவளநாடு மற்றும் கக்கரை கிராம பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கொடுத்த விண்ணப்பத்தில் கூறியிருப்பதாவது, தஞ்சை மாவட்டம் காசவளநாடு புதூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திடம் 2020- 2021க்கான பயிர் காப்பீடுத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து உள்ளோம்.

இதற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி ரசீது பெற்றுள்ளோம். இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் 37 விவசாயிகளுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது. மீதி 63 பேர்களுக்கு காப்பீடு தொகை கிடைக்க வில்லை. அதேபோல் கக்கரை கிராமத்தில் விண்ணப்பித்த 300 பேர்களில் 75 நபர்களுக்கு மட்டும் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது.

மீதி 225 பேர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் உள்ள பதிவு செய்த 30 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளதன. மீதமுள்ள 70 சதவீத விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து விவசாயிகள் அனைவரும் தனித்தனியாக மனுக்கள் எழுதி பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்காத ஒவ்வொரு நபர்களுக்கும் கூடிய விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட்டனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அனைத்து விவசாயிகளுக்கும் கூடிய விரைவில் பயிர் காப்பீடுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/