தஞ்சாவூர்: தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்ட தொடக்க விழா தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே செல்லப்பன்பேட்டையில் பேரணியுடன் நடைபெற்றது.

கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தன்னார்வலர்களை கொண்டு மாணவர்களுக்கு மாலை 5 மணி முதல் 7 மணி வரை பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல் உட்பட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த கற்றல் வழி வகுப்புகளை எல்லாம் அந்தந்தப் பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளியை இந்த திட்டம் குறைக்கும். இதற்காக 200 கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தை முன்னிட்டு பூதலூர் அருகே செல்லப்பன்பேட்டையில் பேரணி நடந்தது. இதில் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெய்வபாலன் பங்கேற்று திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினார்.

இதில் செல்லப்பன்பேட்டை ஊராட்சித் தலைவர் சித்ரா கருப்பையன், மேலாண்மை குழு உறுப்பினர் மஞ்சுளா, ஆசிரியர்கள் காமராஜ், சுப்பிரமணியன், பெஞ்சமின் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/