பேராவூரணி: சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் மழை நீர் தேங்கி நிற்கும் பேராவூரணி சாலையை உடன் சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி பெரியார் முதன்மைச் சாலையில், நீலகண்டப் பிள்ளையார் கோயில் முன்பாக கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெய்த மழையால் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் வழிந்தோட வழியில்லாததால் இவ்வாறு தேங்கி நிற்கிறது.

இவ்வழியாக கடைவீதி, வாரச்சந்தைக்கு வரும் வாகன ஓட்டுனர்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் பள்ளம் இருப்பது தெரியாமல், தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். இந்த சாலை வழியே செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் தேங்கி நிற்கும் தண்ணீர் பல பகுதிகளிலும் சிதறுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

மேலும்,  தண்ணீர் தேங்கி கிடப்பதால், எதிரில் கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள்எந்தப் பக்கமாக ஒதுங்குவது என புரியாமல் நிலைகுலைந்து விடுகின்றனர். தண்ணீர் சில நாட்களாக தேங்கியே கிடப்பதால் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது.
இதனால், அருகில் உள்ள வணிக கடைகள், சந்தைக்கு வரும் பொதுமக்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் வசதியை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்