தஞ்சை சூன் 30: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் நுரையீரல் தொற்றை நொடியில் கண்டறியும் நவீன செயலி ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஹிர்திக் ஸ்ரீராம், அம்சத் கான், முகமது அலி ஜின்னா, கோவிந்தன் ஆகியோர் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் கவிதா வழிகாட்டுதலின் அடிப்படையில் நுரையீரல் தொற்றை நொடியில் கண்டறியும் நவீன செயலி ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இந்தச் செயலி கொரோனா காலகட்டத்தில் நமது உடலின் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து நம்மைக் காத்துக்கொள்ளும் விதமாகச் செயல்படுகிறது. நமது உடலில் ஏற்படும் பிரீத் இன் பிரீத் அவுட் சவுண்டின் வழியாக நமது நுரையீரல் பாதிக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டுபிடித்துக் கொடுக்கிறது.

மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட் உதவிகள் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் தமக்கு கொரோனா போன்ற சுவாச நோய்களின் தொற்று உள்ளதா என்று கண்டறிய இக்கருவி பெரிதும் உதவுகிறது. இந்தப் பிரத்தியேகமான செயலியைத் தஞ்சாவூர் பிஎஸ்என்எல் டிஜிஎம் (பிளானிங்) சிவசங்கரன், ராஜ்குமார், டிஜிஎம் (அட்மின்) ஆகியோர் பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் முனைவர் பாலமுருகன், துணைமுதல்வர் முனைவர் கலைமணி சண்முகம், கல்விப்புலதலைவர் முனைவர் ருக்மாங்கதன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்த நாகராஜன் நிருபர்.
பூதலூர்