தஞ்சாவூர் மார்ச்: 21- புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளதாக,சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகரமாகவும், சங்கீதங்களின் கோட்டையாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17-ம் நூற்றாண்டு முதல், நாதஸ்வரம் என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

1955-ம் ஆண்டுக்கு முன்பு “பிரதி மத்தியமம் ஸ்வரம்” கொண்டு தான் நாதஸ்வரத்தில் தாய் ராகங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர், 1955-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவினைக் கலைஞர்  என்பவரால், நாதஸ்வரத்தில் “சுத்த மத்தியமம் ஸ்வர”த்தை கண்டுபிடித்து அதை நாதஸ்வர கருவியில் உருவாக்கினர். இந்த இசைக்கருவி எளிதாக இசைக்க முடிந்தது. இதனால் தான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் என பெயர் வந்தது. நாதஸ்வர இசை வளர்ச்சிக்கு இந்த கருவி பெரிதும் உதவியது.  தற்போது இந்த நாதஸ்வரம் கருவி 158 நாடுகளில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இந்த இசைக்கருவியை கொண்டு வாசித்த ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாச்சலம் உள்பட புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்களும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை வாசித்து பெரும் புகழ் பெற்றனர். எனவே இந்த நாதஸ்வரத்தை திராவிடர்களின் இசைக்கருவி என அழைக்கப்படுகிறது.

நரசிங்கம்பேட்டையில் ஆச்சா மரங்களை கொண்டு நாதஸ்வரத்தை சுமார் 15 குடும்பத்தினர் தற்போது வடிவமைத்து வருகின்றனர். இந்த நாதஸ்வரம் இரண்டரை அடி நீளத்தில் வெட்டி அதனை கடைந்து, உள்துவாரம் இட்டு, 12 துளைகளை மிகவும் கவனமாகயிட்டு உருவாக்கப்படுகிறது. 

பல்வேறு சிறப்புகள் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜன.31 புவிசார் குறியீடு கேட்டு, தஞ்சாவூர் இசைக்கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்துக்காக விண்ணப்பிக்கப்பட்டது.  இதற்கு பல்வேறு ஆவணங்களை சான்றாக வழங்கி, தொடர்ந்து 8 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்னர் தற்போது புவிசார் குறியீடுக்கான சான்றிதழ் கிடைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் இதுவரை 46 பொருட்கள் புவிசார் குறியீடு பெறப்பட்டதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை சேர்த்து 10 பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் என்ற பெயரில் இந்த கிராமத்தை தவிர, வேறு எங்கும் வடிவமைத்து விற்பனை செய்தால் அந்த செயல் சட்டப்படி குற்றமாகும் என்றார்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/