தஞ்சை மேப் 25 தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு முதல் நாளான நேற்று, தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று 80 வாகனங்கள் மூலம், 15 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ சம்பந்தப்பட்ட கடைகள், பால் பூத், ஏடிஎம். பெட்ரோல் பங்க், தவிர, மற்ற அனைத்து கடைகளும் வர்த்தக நிறுவனங்களை மூட உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலமாக காய்கறி பழங்களை விற்க தமிழக அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்தது.

அதன் படி காலை 6 மணி முதல் 12 மணி வரை வாகனங்கள் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நகரும் காய்கனிக்கடை

இதற்காக விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு என 139 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு இதுவரை வழங்கப்பட்டு இருந்தது. இதில் நேற்று 80 வாகனங்கள் மூலம் 14 ஒன்றியங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், கையுறை மற்றும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும், காய்கறிகள் விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் வாகனங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என அறிவுத்தப்பட்டுள்ளனர்.

காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியலை வாகனங்களின் பொதுமக்கள் எளிதில் பார்க்கும்படி தொங்கவிடப்பட்டு இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் மினி லாரிகள் சரக்கு ஆட்டோக்கள் மூலம் இந்த காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று முதல் நாளில் 14.88 டன் காய்கறிகள் 5 டன் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.