தஞ்சாவூர் சூலை 20: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பெத்தனாட்சிவயல் கிராமத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு ரூ 5 ஆயிரம் ரொக்கப்பணம் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெத்தனாட்சிவயல் கிராமத்தில், பேராவூரணி ரோட்டரி சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து இலவச கால்நடை மருத்துவ முகாமை நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஊமத்தநாடு ஊராட்சி மன்றத் தலைவர் குலாம் கனி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் டாக்டர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மண்டலம் எட்டு துணை ஆளுநர் கே. பி. எல். ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், தீவனப் புல் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கால்நடைகளுக்கு தேவையான தாது உப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
டாக்டர்கள் பிரகாஷ், முத்துக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரிச் சங்க செயலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், பொருளாளர் பாரி வளவன், நிர்வாகிகள் முருகுவளவன், நாகராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு தீ விபத்தினால் வீட்டை இழந்த, மாரிமுத்து-சுபா தம்பதிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டது.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/