தஞ்சை, பிப்.15 தஞ்சை மேலவீதி கோட்டை அகழி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி புவனேஸ்வரி. நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த குரங்குகள் பிறந்து 1 வாரமே ஆன இரட்டை பச்சிளங் குழந்தைகளை தூக்கி சென்றது. இதில் மேற்கூரையில் மீட்கப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது-. ஆனால் அகழியில் வீசப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


குரங்குகளால் இந்த சம்பவம் நடந்ததால் மாவட்ட வன அலுவலர் இளையராஜா நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் குரங்குகளை பிடிக்க உதவி வன பாதுகாவலர் வடிவேல், வனச்சரகர் ஜோதிகுமார் உள்பட 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் குரங்குகளை பிடிக்கும் பணியை தொடங்கினர். குரங்குகளை பிடிக்க இரும்பு கம்பிகளால் ஆன கூண்டுகள் வைக்கப்பட்டது. இநத் கூண்டுகள் சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள அரசமரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று குரங்குகள் எதுவும் விடிபடவில்லை.


இந்நிலையில் இன்று 2வது நாளாக குரங்குகள் பிடிக்கும் பணி தொடர்ந்தது. நேற்று 3 கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில் இன்று 8 கூண்டுகளாக அதிகரித்தது. அதன்படி கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் வாழைபழம் உள்ளிட்ட தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது உணவை தேடி வந்த 25 குரங்குகள் ஒவ்வொன்றாக கூண்டுக்குள் வர தொடங்கின. உடனடியாக அந்த கூண்டுகளை வனத்துறையினர் மூடினர். தொடர்ந்து வனத்துறையினர் குரங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


இது குறித்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறும்போது
இன்று இதுவரை 25 குரங்குகள் பிடிப்பட்டுள்ளன. தொடர்ந்து 2 நாட்கள் கண்காணிப்பு பணி நடைபெறும். அதற்குள் அனைத்து குரங்குகளையும் பிடித்து விடுவோம். பிடிப்பட்ட குரங்குகள் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சை மலைப்பகுதியில் விடப்படும். மேலும் நகரில் வேறு எந்த பகுதிகளிலாவது குரங்குகள் தொல்லை இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பர் என்றார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை