தஞ்சை மே 22: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மன அழுத்தம், தனிமையை போக்கும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் பட்டுக்கோட்டையில் பெருமாள்கோயில் புதுரோட்டில் உள்ள கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் மன அழுத்தம், தனிமையை போக்கும் வகையில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியைப் பட்டுக்கோட்டை எம். எல். ஏ அண்ணாதுரை, சார் ஆட்சியா் பாலச்சந்தா் ஆகியோர் தொடங்கி வைத்தனா். நாட்டுப்புற கலை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த தப்பாட்டம் அனைவரையும் வெகுவாக கவா்ந்தது.

குறிப்பாக, நோய்த்தொற்று பாதித்தவா்கள் தங்களது தனிமையை மறந்து மிகுந்த ஆனந்தம் அடைந்தனா். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், நகராட்சி ஆணையா் சென்னு கிருஷ்ணன், வட்டாட்சியா் (பொ) சாந்தகுமார், மருத்துவா்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்