தஞ்சாவூர் சூலை 20 : தஞ்சாவூர் மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வரும் மழையால் அதிராம்பட்டினத்தில் கருவாடு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மீன் கருவாடு வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் துறைமுக பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து உப்பு தண்ணீரில் ஊறவைத்து வெயிலில் உலர வைத்து கருவாடுகளாக்கி பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி, மதுக்கூர் மற்றும் கிராம பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கருவாட்டு சந்தைகள் மூடப்பட்டு இன்னும் திறக்கப்படாததால் கருவாடு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் கருவாடு காயவைக்கும் பணி நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது அரசு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

கருவாடு வியாபாரிகள் துறைமுக பகுதிகளுக்கு சென்று அங்கு உள்ள மீன்களை மொத்தமாக வாங்கி சுத்தப்படுத்தி உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் உலர வைத்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அவ்வபோது பெய்து வரும் மழையால் வெயிலில் உலர வைத்த கருவாடுகளை பாதுகாக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருவது தொழிலாளர்களை மீண்டும் கவலை அடைய செய்து உள்ளது. தற்போது சந்தைகள் திறக்கப்படாமல் உள்ளதால் ஒரு கிலோ தோளி பொடி கருவாடு ரூ.40-க்கும், தோகை கருவாடு கிலோ ரூ. 100-க்கும், ஒரு கிலோ பன்னா கருவாடு ரூ. 100-க்கும் துறைமுக பகுதிகளிலேயே தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/