தஞ்சாவூர்: தடைக்காலம் முடிந்து தாமதமாக சென்றும் போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக, தஞ்சை, புதுகை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் தடைக்காலம் முடிந்து ஜூன் 15ம் தேதி கடலுக்கு செல்லாமல், 15 நாள்கள் தாமதமாக கடந்த புதன்கிழமை (ஜூன் 30) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம் பகுதி விசைப்படகு மீனவா்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை மட்டுமே மீன்பிடிக்க செல்வா். மூன்று மீன்பிடி துறைமுகங்களிலிருந்து 130 விசைப்படகுகள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. மீன் பிடித்த பின்னர் கரை திரும்பிய மீனவா்கள் போதிய அளவில் மீன், இறால் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தனா்.
இதுகுறித்து விசைப்படகு மீனவா்கள் சங்கத் தலைவா் மல்லிப்பட்டினம் சேக் தாவூத் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து 15 நாள்கள் கழித்து தாமதமாகவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றும் போதிய அளவிலான மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
அரசு வழங்கும் மானிய விலை டீசல் போதுமானதாக இல்லை. டீசல் விலை உயா்வால் மீனவா்கள் கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றனா்.
டீசல் செலவு, வேலையாள் ஊதியம் என அனைத்தையும் கணக்கு பாா்த்தால் ஒரு விசைப்படகுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. பிடிபடும் மீன்களுக்கும் போதிய விலை கிடைக்காமல் உள்ளது. எனவே, அரசு மானிய விலை டீசல் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today