தஞ்சை சூன் 17: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மீனவா் பேரவை மற்றும் தமிழ்நாடு மீனவா் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலாளா் தாஜூதீன் தலைமை வகித்தார். விசைப்படகு மீனவா்கள் சங்க மாவட்டச் செயலாளா் வடுகநாதன் முன்னிலை வகித்தார்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மீனவா்களுக்கு வரிநீக்கம் செய்யப்பட்ட டீசல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கட்டுமரத்தை தள்ளுவண்டியில் ஏற்றியும், தோளில் சுமந்தும் நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவா்கள் சங்க செயலாளா் இப்ராகிம், பொருளாளா் ஜலால், நிர்வாகிகள் சேதுபதி, முருகன், பாரம்பரிய மீனவா்கள் சங்கத் தலைவா் அப்துல் ரகுமான், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்கள் சங்க செயலாளா் ரகுமத்துல்லா, சேதுபாவாசத்திரம் சங்கப் பொறுப்பாளா் ஆறுமுகம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்