தஞ்சாவூர் ஆக 29: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் ரூ.10 கோடியில் மேம்பாடு செய்யப்படும் என்று, சட்டப்பேரவையில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புக்கு மீனவா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரத்தில் உள்ள மீன்பிடி இறங்குதளம் சேதமடைந்து நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இதனால் மீனவா்கள் விசைப்படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், மீன்களை இறக்கி ஏலம் விடுவதற்கும் மிகவும் சிரமத்துக்குள்ளானாா்கள்.

இதையடுத்து முதல்வா் ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சா் ஆகியோரை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் அசோக்குமாா் சந்தித்து, சுகாதார முறையில் மீன் இறங்குதளம், படகுகள் நிறுத்தி வைப்பதற்கு படகு அணையும் சுவா், போக்குவரத்துக்கு முறையான அணுகுசாலை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

இதை கவனத்தில் கொண்டு சட்டப்பேரவையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின் போது, ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி கூடுதல் வசதிகளுடன், சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் சீரமைக்கப்படும் என அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அமைச்சரின் அறிவிப்பு மீனவா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/