தஞ்சை சூலை 12: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் வலையில் கடல் ஆக்கு சிக்குவதால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீனவர் வலையில் கடல் ஆக்கு சிக்குவதால் மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரைதெரு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் நாட்டு படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர்.

மேலும் சில மீனவர்கள் இறால் பிடிக்கவும், நண்டு பிடிக்கவும் கடலுக்கு செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது. இதையடுத்து மீண்டும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அதிராம்பட்டினம் கடற்பகுதி சேறும், மணலும் கலந்த பகுதி என்பதால் சேற்றுக்கு அடியில் உள்ள சிப்பி எனப்படும் கடல் ஆக்குகள் தற்போது காற்றின் வேகத்தால் மேல்நோக்கி வருகிறது. இதனால் மீனவர்கள் விரிக்கும் வலையில் அதிகமாக கடல் ஆக்குகள் சிக்குகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைந்த அளவே கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்புகின்றனர்.

இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், ஊரடங்கிற்கு பின் தற்போது மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகிறோம். அதிராம்பட்டினம் கடற்பகுதி சேற்றும், மணலும் கலந்த பகுதி என்பதாலும், தற்போது கடற்பகுதியில் சோலா காற்று வீசி வருவதாலும் சேற்று பகுதியிலிருந்து மேல் நோக்கி கடல் ஆக்குகள் வலையில் சிக்கி கொள்கிறது. பிறகு விரித்த வலையை எடுத்துக்கொண்டு கரையை திரும்பிய பிறகு தரம் பிரிக்கும் போது வலையில் சிக்கிய மீன்களை விட கடல் ஆக்குகள் தான் அதிகமாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் வலைகளும் சேதமாகிறது என்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/