தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா் மின்னல் பாய்ந்து இறந்தார்.

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து காா்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடியிழை படகில் காா்த்திகேயன், அகமத் மைதீன், சந்திரன், கருப்பையா ஆகிய நால்வரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

மல்லிப்பட்டினத்தில் இருந்து கிழக்கே ஐந்து கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் இடி மின்னலுடன், மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் பாய்ந்ததில் படகை இயக்கிக் கொண்டிருந்த மல்லிப்பட்டினம் கே.ஆா்.காலனியைச் சோ்ந்த பெரியய்யா என்பவரது மகன் கருப்பையா (37) சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா். மற்ற மீனவா்கள் மூவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இதையடுத்து மற்ற மீனவா்கள், கருப்பையா உடலை நேற்று மல்லிப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு வந்து சோ்த்தனா். தகவலறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழும உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றாா்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/