தஞ்சாவூா் ஆக 03: தஞ்சாவூா் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் மணிமண்டபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு, கை கழுவும் முறை செயலாக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் தெரிவித்தாவது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியா்கள், சாா் ஆட்சியா்கள், கோட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் தலைமையில் 62 இடங்களில் விழிப்புணா்வு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாமல் வருபவா்களுக்கு அறிவுரை கூறி அபராதமும் விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் இதுவரை ரூ. 4 கோடிக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். வழிகாட்டு விதிமுறைகளை மீறுவோா் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கொரோனா தடுப்பு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து, தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் பேருந்து, லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனம் ஆகியவற்றில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது, கை கழுவுவது குறித்து மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அப்போது, பட்டுக்கோட்டை, மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் முகக்கவசம் அணியாத பயணிகளை கீழே இறங்கச் செய்து தலா ரூ. 200 அபராதம் விதிக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, தஞ்சாவூா் கோட்டாட்சியா் வேலுமணி, தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொ) நமச்சிவாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/