தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாலையோரமாக பிரசவ வலியில் துடித்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு அந்த இடத்திலேயே பிரசவம் பார்த்து, தாயையும் சேயையைம் காப்பாற்றிய பெண் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் அந்தப் பெண்ணை கர்ப்பமாக்கியவனையும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரையில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர் அங்கேயே தங்கியுள்ளார். அவர் யாரிடம் பேசாமலும், யாசகமும் பெறாமலும், எவருக்கும் தொந்தரவு ஏதும் செய்யாமல் இருந்துள்ளார். யாராவது அவருக்கு உணவு கொடுத்தால் மட்டுமே வாங்கி சாப்பிடுவாராம். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பெரிய நைட்டி மட்டுமே அணிந்திருந்தால் அவர் கர்ப்பமாக இருந்தது வெளியே தெரியவில்லை.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை சுவரில் சாய்ந்தவாறு முனகிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, அவ்வழியாகச் சென்ற கிழக்கு கரை மேற்கு காவல் நிலைய முதல்நிலை தலைமை காவலர் சுகுணா என்பவர் பார்த்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோதுதான், அவர் பிரசவ வலியால் துடிப்பது தெரியவந்துள்ளது.

குழந்தையின் உடல் வெளியே தெரிய, தலை மட்டும் உள்ளே சிக்கியவாறு அதிகளவில் ரத்தம் வெளியேற வலியால் துடித்துக் கொண்டு இருந்துள்ளார் அந்தப் பெண். அதிர்ச்சியடைந்த தலைமைக் காவலர் சுகுணா, உடனடியாக மேற்கு காவல் நிலைய பெண் காவலர்களை உதவிக்கு அழைத்து அவர்களது உதவியுடன் முதலுதவி செய்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் பெண் காவலர்கள் எடுத்த முயற்சியிலேயே பெண் குழந்தை பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பேபி, காவல் நிலையத்தில் வைத்திருந்த தன்னுடைய இரண்டு சேலைகளை கொண்டு வந்து அந்த பெண் மீது போர்த்தியுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்த பெண்களும் வந்து உதவி செய்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்ணும் அவரது குழந்தையும் நலமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவியாக இரண்டு பெண் காவலர்களையும் நியமித்துள்ளார் காவல் ஆய்வாளர் பேபி.

பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இந்த நிலைக்குக் காரணமானவை தேடும் பணியில் இறங்கிய போலீசார், அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பெண்ணை அடிக்கடி வந்து பார்த்துச் சென்ற பாலக்கரையைச் சேர்ந்த ஜான் என்பவனைக் கைது செய்தனர்.

சம்பவ இடம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், மேற்கு காவல் நிலைய பெண் காவலர்கள் அனைவரும் அங்கு சென்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றியதை கேட்டு மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா அவர்களை வெகுவாகப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பொதுமக்களும் பெண் காவலர்களின் இந்த சேவையை பாராட்டினர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/