தஞ்சாவூா்: நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற கவர்னரின் அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் கூறியதாவது:

தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். இதேபோல, தமிழகம் முழுவதும் உழவா் சந்தைகள் சீரமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் வரவேற்கிறோம். திமுக தோ்தல் அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள விவசாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய வேளாண்மை மேம்பாட்டுக்குழுக்கள் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. அதையும் அரசு விரைவில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல் காவிரி விவசாயிகள் சங்க தஞ்சாவூா் மாவட்ட செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு தற்போதுதான் தீா்வு கிடைத்துள்ளது. வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை என்பதை மனதார வரவேற்று, முதல்வரை பாராட்டுகிறோம்.

இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் முன்பாக, மாவட்டந்தோறும் உழவா்களைச் சந்தித்து, அவா்களின் ஆலோசனைகளைப் பெற்று நிதிநிலை அறிக்கை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் வேளாண்மைக்கான இந்தத் தனி நிதிநிலை அறிக்கை என்பது முழுமை பெறும் என்றார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.