தஞ்சை சூலை 02: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் 3 ஆயிரம் மூட்டை நெல்லை கொட்டி வைத்து கொள்முதலுக்காக விவசாயிகள் காத்து கிடக்கின்றனா். மழை பெய்து வரும் நிலையில் உடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை வட்டம், கட்டயங்காடு உக்கடையில் பிள்ளையாா் கோயில் திடலில் சம்பா சாகுபடிக்காக தற்காலிகமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. சம்பா சாகுபடி முடிந்து தற்போது கோடை அறுவடை நடைபெற்றுள்ளது. இதையடுத்து, இந்த கொள்முதல் நிலையத்தில் கட்டையங்காடு, கட்டையங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, சிவனாம் புஞ்சை, அம்பாள்புரம், மதன்பட்டவூா் ஆகிய பகுதிகளை சோ்ந்த விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதலுக்காக கொட்டி வைத்துள்ளனா்.

கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், கடந்த 2 வாரமாக கிட்டத்தட்ட 3 ஆயிரம் மூட்டை நெல்லுடன் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா். நெல் கொள்முதல் குறித்து பட்டுக்கோட்டை நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டபோது, தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனராம். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனா்.

இந்த 3 ஆயிரம் மூட்டைகளையும் அருகிலுள்ள நெல் கொள்முதல் நிலையம் கொண்டு செல்வதென்றால், அதிக கால விரயமும், பொருளாதார இழப்பும் ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனா். வெயில், மழையால் நெல்மணிகள் சேதமடையும் முன்பாக மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தங்களை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக பட்டுக்கோட்டை மண்டல துணை மேலாளா் ஜபருல்லா கூறியது: சம்பா சாகுபடிக்கு அப்பகுதியில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கோடை சாகுபடி பரப்பளவு குறித்து வேளாண்துறை மற்றும் கிராம நிா்வாக அலுவலா் கொடுத்த அறிக்கையின்படி கோடையில் அப்பகுதியில் குறைவான பரப்பளவில் மட்டுமே அறுவடை பணி நடைபெறும் என்று கருதி அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை.

தற்போது அப்பகுதி விவசாயிகள் கூறும் பரப்பளவிற்கும் , வேளாண்துறை சாா்பில் கொடுக்கப்பட்ட பரப்பளவிற்கும் வேறுபாடு உள்ளதால் மறு கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளோம். இருந்த போதிலும் விவசாயிகளின் நலன் கருதி ஓரிரு நாள்களில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
senthilm12.sg-host.com