தஞ்சை சூலை 13: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே தொடா் மழையால் சாய்ந்த மின் கம்பங்கள் சீர் செய்யப்படாமல் வயலிலேயே கிடக்கிறது. இதனால் குறுவை நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் திருவையாறு வட்டாரத்தில் அதிகளவு மழையளவு பதிவாகியுள்ளது. மேலும் இப்பகுதியில் பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் வாழை மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதில், திங்களூா் பகுதியிலும் வயல்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், சாய்ந்த மின் கம்பங்களை மின்வாரியத்தினர் இன்னும் அகற்றப்படவில்லை. ஒரு வாரம் ஆக போகும் நிலையில் இன்னும் சீா் செய்யப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். 30 ஏக்கரில் குறுவை நாற்றங்கால் விடப்பட்டு, நடவுக்குத் தயாா் நிலையில் உள்ளன. தற்போது மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளதால், நாற்றங்கால்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவது மட்டுமல்லாமல், வயல்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், நடவுப் பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். உடனடியாக மின் கம்பங்களைச் சரி செய்து இணைப்பு வழங்கினால்தான் குறுவை நாற்றங்கால்களைக் காப்பாற்றி, நடவு செய்ய முடியும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/