தஞ்சை மே.14–
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படாமல் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, இடுபொருள் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், அ.இ.விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி மற்றும் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.


“கடந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில், பருவம் தவறி பெய்த கனமழை மற்றும் புயல் பாதிப்பால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் பொருட்டு, தமிழக அரசால் வழங்கப்பட்ட, விவசாய இடுபொருள் நிவாரணத் தொகை ஆவணங்கள் தவறி உள்ளது என வழங்கப்படாமல் இருந்த தொகை, தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டதால் வழங்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், தேர்தல் முடிந்து புதிய அரசும் பொறுப்பேற்று செயல்படத் துவங்கியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கிடைக்கப் பெறாத நிலை உள்ளது. குறிப்பாக அம்மாபேட்டை ஒன்றியம் ஆலங்குடி மற்றும் காட்டுக்குறிச்சி கிராமங்களில் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. 


இடுபொருள் நிவாரணத் தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.