தஞ்சை சூன் 14: தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் கிளை வாய்க்கால்கள் இதுவரை தூர்வாரப்படவில்லை. இதனால் 200 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களில் குறுவை சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தூர்வாரும் பணிகளில் மெத்தனப்போக்கே இருந்து வருகிறது. மேலும் முறையாக தூர்வாரப்படவில்லை. பல இடங்களில் ஆறுகள் மட்டுமே தூர்வாரி கிராமங்களுக்கு செல்லக்கூடிய வாய்க்கால் கிளை வாய்க்கால்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரவில்லை.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம், ராமானுஜபுரம் முத்து கன்னி வாய்க்கால், பூரான் வாய்க்கால் மற்றும் பல வாய்க்கால் இன்னும் தூர்வாரவில்லை. முறையாக தூர்வாரும் பணி நிறைவடையாத நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் கடைமடை வந்து சேராது. இது குறுவை சாகுபடிக்கு பயனளிக்காது. இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்