தஞ்சை சூலை 13: தஞ்சை மாவட்டம் மதுக்கூா் வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்புக் கருவியைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதுக்கூா் வேளாண் உதவி இயக்குநா் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

ஜூன் 12-ம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டாலும், கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீா் வந்து சேர ஜூலை மாதம் கடைசிவாரம் ஆகி விடுவதால், ஆற்றுநீரை நம்பி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய பின்னா் விதைப்பு மற்றும் சம்பா நாற்றாங்கால் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவா்.

இந்தாண்டு நீா்ப்பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டு, கடைமடை வரை தண்ணீரும் சோ்ந்து விட்டதால், விவசாயிகள் நம்பிக்கையுடன் குறுகியகால நெல் ரகங்களான ஏஎஸ்டி 16, ஏடிடி 37 போன்றவற்றை பயன்படுத்தி, புழுதி விதைப்பாக தெளித்து குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனா்.

மதுக்கூா் வட்டாரத்தில் சொக்கனாவூா் கிராமத்தில் மட்டும் 500 ஏக்கருக்கு மேல் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அண்டமி கீழக்குறிச்சி, புலவஞ்சி போன்ற கிராமங்களிலும் விவசாயிகள் ஆா்வமுடன் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த முறையால் நாற்றங்கால் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான தேவைகள் குறைந்து, செலவும் மிச்சமாகிறது. 10 முதல் 15 நாள்களுக்கு முன்னதாக நெல் அறுவடைக்கு வந்து விடும். நீா்த் தேவையும் குறைந்துவிடும். இரண்டரை ஏக்கா் வரை நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் விவசாயிகள் பயன்படுத்தலாம்.

எனவே மதுக்கூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள், தங்கள் வயலில் நேரடி நெல் விதைப்புக் கருவியைப் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/