தஞ்சை சூன் 30: தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த வரகூரில் அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து வாங்கி சென்ற விதை நெல் முளைக்காததால் உழவர் ஒருவர் வேதனையடைந்துள்ளார்.
மேட்டூர் அணை கடந்த 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து 16ம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். பல பகுதிகளில் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, அடுத்த வரகூர் கிராமத்தில் வீரமணி என்ற விவசாயி 5 ஏக்கர் நிலத்தில் கோ 51 விதை நெல் விதை நாற்றங்காலுக்காக விதைத்திருந்தார். இதை மன்னார் சமுத்திரத்தில் செயல்படும் அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து வாங்கியுள்ளார்.
14 நாள்கள் ஆன பின்பும் பயிர்கள் முளைக்காமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் விவசாயி வீரமணி வேதனை அடைந்துள்ளார். மேலும் பல விவசாயிகள் இதேபோல் கோ 51 நெல் ரக விதைகளை வாங்கி அவை முளைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்