தஞ்சை சூலை 07: தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி பயிற்சி நடந்தது.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உலக நலத் துறையின் கீழ் அட்மா திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் புலவஞ்சி கிராமத்தில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி பயிற்சியானது தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் வழிகாட்டுதலில் வேளாண் துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் பாலசரஸ்வதி அறிவுரைப்படி நடைபெற்றது.

பயிற்சியில் 25 விவசாயிகள் கலந்துகொண்டனர். இவர்கள் ஐந்து குழுவினராக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் நேரடியாக எள் வயலில் இறங்கி குழு தலைவர்களாக அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர் சுகிர்தா உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் ஐயா மணி ராஜு மற்றும் ஜனனி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மேற்பார்வையில் நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள் நெல்லில் காணப்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் அறிகுறிகள் ஆகியவற்றை நேரடியாக களத்தில் கற்றறிந்தனர்.

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் பூச்சியியல் உதவிப்பேராசிரியர் மதி ராஜன் எள் பயிரில் விதைப்பு முதல் அறுவடை வரை காணப்படும் பூச்சி நோய் தாக்குதல் அவற்றை கண்டறியும் முறைகள் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகள் ஆகியவை பற்றி நேரடியாக களத்திலும் வகுப்பிலும் விளக்கிக் கூறினார். அட்மா பணியாளர்கள் எள் விதை நேர்த்தி நுண்ணூட்டம் இடுதல் பயிர் எண்ணிக்கை பராமரிப்பு வேம்பு மருந்து பயன்பாடு ஆகியவை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டினர்.

பேராசிரியர் மதிராஜன் எள்ளில் வெள்ளை தடுப்பூசியால் ஏற்படும் பச்சை பூ குறைபாடு இலை மடக்குப் புழு கொம்பு புழு வேர் வாடல் நோய் போன்றவைகள் பற்றி மிகத் தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி வேர் வாடல் நோய் கட்டுப்படுத்திட டிரைக்கோடெர்மா விரிடி மருந்தினை விதைநேர்த்தி செய்தும் வயலின் நேராக இடுவதன் நன்மை பற்றியும் விளக்கினார். எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த எளிய நுட்பங்களைப் பயன்படுத்தி கூடுதல் லாபம் பெறவும் தரமான உற்பத்தியை அதிகரிக்கவும் கேட்டுக்கொண்டார்.

செய்தி நாகராஜன் நிருபர்,
https://thanjai.today/