தஞ்சை பிப் 13,
கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட மூவருக்கு மயக்கம். தடுப்பூசியால் பாதிப்பு இல்லை என கல்லூரி முதல்வர் விளக்கம்.

தஞ்சைமாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி இதுவரை 10,122 பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் இதுவரை 2,908 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் 220 பேருக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது.

முதல் முறையாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட 220 பேரில் விமலாமேரி, மனோகர், சாந்தி ஆகிய மூன்று பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இரண்டு மணி நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிகிச்சை பெற்றுவரும் மூவரையும் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருததுரை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பூசி போடப்பட்டதால் அவர்களுக்கு மயக்கம் ஏற்படவில்லை எனவும், தடுப்பூசியால் எந்த ஒவ்வாமை பாதிப்பும் இல்லை என்றும், அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்கள் இருப்பதனால்தான் மயக்கம் ஏற்பட்டதாகவும், இதுவரை மாவட்டத்தில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை எனவும், தடுப்பூசி போட சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்த வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.