தஞ்சாவூர் செப் 26: தஞ்சாவூர் மாவட்டம், இந்திய உணவு பதன தொழில் நுட்ப பயிற்சி நிறுவன கூட்ட அரங்கில் மத்திய அயல்நாட்டு இயக்குநரகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து ஏற்றுமதி துறைக்கான ஊக்குவிப்பு கூட்ட கருத்தரங்கை நடத்தின.

எம்.பி., பழனிமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

தொடர்ந்து புவிசார் அங்கீகாரம் பெற்ற கலைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு கலெக்டர் பேசியதாவது:

75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் இன்று 26 வரை வர்த்தகம் மற்றும் வணிகவாரமாக கொண்டாடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தின் ஏற்றுமதி திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த வழிகாட்டும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் தமிழ்நாட்டில் பன்முகத்தன்மை மற்றும் பழங்களைக் கொண்டு ஏற்றுமதியில் பன்மடங்கு வளர்ச்சிஅடையும் எனவும் “Made in india வைப்போல Made in Tamilnadu” என்ற குரல் உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பறைசாற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அல்லும் பகலும் ஏற்றுமதியாளர்கள் உழைத்திடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இ-காமர்ஸ் வர்த்தகத்தை மேம்படுத்தி உலகஅளவில் தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்களை சந்தைபடுத்துதல், 2030க்குள் 100 மில்லியன் டாலராக ஏற்றுமதியை உயர்த்துதல், 25 சதவீதம் மானியம் பெற வழிவகை செய்தல், ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்ய தொகுப்பு சலுகைகள் வழங்க திட்டம் வடிவமைத்தல் போன்றவை ஏற்றுமதி வளர்ச்சி அடைவதற்கான வழிகாட்டுதல்கள் ஆகும்.

தஞ்சை மாவட்டம் வேளாண்மையை அடிப்படையாக கொண்ட மாவட்டமாகும். நமது மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள் விவசாய விளைபொருட்கள் இயற்கை வழியில் ரசாயனம் கலப்பற்ற முறையில் உருவாக்கும் அரிசி போன்றவை தேங்காய் நார் மற்றும் தேங்காயின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் களிமண் பாண்டங்கள் போன்றவை ஏற்றுமதிக்கு ஏற்றதாக மாவட்டதொழில் மையத்தில் இனங் காணப்பட்டுள்ளது.

நபார்டு நிறுவனம் தனதுதிட்டங்கள் மூலம் நமதுமாவட்டத்தில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து வருகிறது. உலகத்தரம் வாய்ந்த தேங்காய் நார் டெல்டாபகுதியில் விளையும் தேங்காய் மட்டையிலிருந்து பெறப்படுகிறது. இத்துறையில் தேங்காய் நாரிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டு பொருட்களின் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. இத்துறையில் பெருமளவு முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் சிறு குறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் முறையாக தரநிர்ணயம் செய்யப்பட்டு அதற்குரிய ஆய்வக வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

தரத்தை உறுதி செய்து அதற்கான தரசான்றிதழ்கள் சிறு நிறுவனங்களில் பெறவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வெளிநாட்டுவர்த்தக இணை இயக்குனரகம் உதவி பொது இயக்குனர் பாக்கியவேலு, இந்தியஉணவுபதப்படுத்தும் தொழில் நுட்பபயிற்சி நிறுவன இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன், முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சகுந்தலா, விவசாயம், கிராமப்புற மேம்பாட்டுக்கான வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/