தஞ்சை பிப்.23 -மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் அரசுத் துறையில் உள்ளது போல தனியார் துறையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம், சட்டமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் தினமான செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ்.சிவப்ரியா, மாவட்ட துணைத் தலைவர்கள் பி.சங்கிலிமுத்து, வி.ரவி, மாவட்ட துணைச் செயலாளர்கள் வி.எம்.செந்தில்குமார், பி.கிறிஸ்டி, சி.ராஜன், நிர்வாகிகள் ஒரத்தநாடு டி.கஸ்தூரி, திருவோணம் ராஜேஷ், அம்மாபேட்டை மகேஸ்வரி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற குடியேறும் போராட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஒன்றியப் பொறுப்பாளர் ஏ.ஜி.நீதிபதி, பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வின்சென்ட் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். சுந்தர்ராஜன், ஜெயராஜ், சுவாமிநாதன், செல்வகுமார், மாதராணி, சித்ராதேவி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.