சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கல்லூரிகளும் இன்று முதல் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும்,பொறியியல் கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கப்பட உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. போதிய இடைவெளியுடன் மாணவர்கள் அமர்வதற்கும் கல்வி நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் நோய்த்தொற்று பரவி வருவதால் அங்கிருந்து கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/