தஞ்சை மே 12: அவசரத் தேவைக்கு உதவும் என்பதால் விலை அதிகரித்துள்ள போதிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கருவாடு விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

கொரோனாத் தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனொரு பகுதியாக மே.10 முதல் 24ம் தேதி வரை, இரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியில் நடமாட முடியாதவாறு தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்களுக்கு உள்ளது. மளிகைப் பொருட்கள், பால், மருந்து, காய்கறி, பழக்கடைகள் காலை முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் 2 வாரத்திற்கு தேவையான மளிகை மற்றும் உணவு அதிகளவில் வாங்கி வருகின்றனர்.

இந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கருவாட்டுக் கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கருவாடுகளை வாங்கிச் சென்றனர். மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், கருவாடு தயாரித்து, காயவைத்து விற்பனைக்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கருவாடு விற்பனை செய்யப்பட்டது.

கருவாடு உற்பத்தி இல்லாத நிலையில், வழக்கத்தை விட கருவாடு விலை அதிகரித்து காணப்பட்டது. கருவாட்டு பொடி இருந்தால், அவசரத் தேவைக்கு குழம்பு வைத்து சமாளிக்க முடியும். ஊரடங்கு காலமாக இருப்பதால், கருவாடு அவசரத் தேவைக்கு உதவும் என்பதால், வீட்டுத் தேவைக்கு விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்