சென்னை ஏப்ரல் 11 சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் ஆத்திரமடைந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 182 பயணிகள் செல்ல இருந்தனர். அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனா்.

இதற்கிடையில் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதையும், இந்த நிலையில் விமானம் வானில் பறப்பது ஆபத்து என்பதையும் விமானி கண்டறிந்துள்ளார். இதையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

விமான பொறியாளா்கள் குழுவினா் விரைந்து வந்து விமானத்தை பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறாமல் ஓய்வுகூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதனால் துபாய் செல்ல வேண்டிய பயணிகள் 182 போ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக 4 மணி நேரத்திற்கு மேலாக சென்னை விமானநிலையத்தில் தவித்து கொண்டிருந்தனா்.

காலை 9 மணியாகியும் விமானத்தை பழுதுபாா்க்கும் பணி முடிவடையவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலையத்திற்குள் போராட்டம் நடத்த தொடங்கினா். எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் கவுண்டரை சூழ்ந்து கொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினா். அதிகாலை ஒரு மணிக்கு வந்து 8 மணி நேரமாக தவிக்கிறோம், குழந்தைகள் பசியால் அழுகின்றனா், எப்போது தான்  விமானம் புறப்படும்? என்று ஆத்திரத்தோடு கேட்டனா். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

பயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்து,விமானத்தில் வழங்க வேண்டிய உணவுகளை உடனடியாக வழங்கினா். குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட்களும் அளித்தனா். தொடர்ந்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனா். பின்பு பயணிகள் அனைவரையும் சொகுசு பஸ்களில் ஏற்றி சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைத்தனா் .விமானம் இன்று இரவு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்
தஞ்சை.