தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட உள்ளதால் கருவாடு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது வெயில் சுட்டெரிப்பதால் சிறிய மீன்களை காயவைக்கும் பணிகளில் பெண்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளில் கருவாடு வியாபாரம் செய்பவர்கள் துறைமுகப் பகுதியில் மீன்களை எடுத்து உப்புத் தண்ணீரில் ஊறவைத்து வெயிலில் உலர வைத்து அதனை பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி, மதுக்கூர் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மார்க்கெட் சந்தைகள் பகுதிகளில் விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்ததைத் தொடர்ந்து அதிராம்பட்டினத்தில் இயங்கி வந்த மீன் மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். கருவாடு விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்தது. இதையடுத்து தொடர்ந்து மீன் மார்க்கெட் இயங்கத் தொடங்கியுள்ளது.

தற்போது அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதனால் கருவாடு விற்பனை செய்யும் தொழிலாளர்கள் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று மீன்களை ஏலத்தில் எடுத்துக்கொண்டு கருவாடு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். தற்போது வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மீன்களை காய வைக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

தற்போது ஒரு கிலோ தோகை கருவாடு 40 ரூபாய்க்கும், கத்தாலை கிலோ 60 ரூபாய்க்கும், பன்னா கருவாடு கிலோ 65 ரூபாய்க்கும், வவ்வால் மீன் கிலோ 400 ரூபாய்க்கும் திருக்கை கருவாடு கிலோ 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.