தஞ்சை சூலை 02: தஞ்சை களைக்கொல்லி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை விற்பனை செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வித்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிா்ப்பு சக்தியுடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட (எச்.டி.) பருத்தி விதைகளைச் சாகுபடி மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இன்னும் ஒரு மாதத்தில் பருத்தி சாகுபடி பருவம் தொடங்க உள்ள நிலையில், காய் புழுக்கள் சக்தி உடைய (பி.டி.) ரக பருத்தி விதைகளை மட்டுமே விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் விதை ஆய்வாளா்களால் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்துக்கு வரும் அனைத்து நிறுவனங்களின் பருத்தி விதைகளில் அனைத்து குவியல்களிலும் விதை மாதிரி எடுத்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிா்ப்பு சக்தியுடைய பருத்தி விதைகளை விற்பனை செய்தாலோ அல்லது விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்திருந்தாலோ அந்நிலையங்களின் விதை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் நீதிமன்ற வழக்கும் தொடரப்படும். மேலும், விவசாயிகள் களைக்கொல்லி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்ய வேண்டாம்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today