தஞ்சாவூர் அக் 13: தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால் கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மாவட்டத்தில் காலியாக இருந்த ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவி, இரு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள், 6 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள், 44 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், ஏற்கெனவே சேதுபாவாசத்திரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி, 26 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட த. மறவக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

எனவே, மாவட்ட ஊராட்சி 16-ஆவது வாா்டு, ஒரத்தநாடு ஒன்றியம் 1-ஆவது வாா்டு, கும்பகோணம் ஒன்றியம் 24-ஆவது வாா்டு, 4 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள், 18 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான இடைத்தோ்தல் அக். 9 ஆம் தேதி நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு 16-ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளா் கோ. ராதிகா 8,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இதேபோல, ஒரத்தநாடு ஒன்றியம் ஒன்றாவது வாா்டில் திமுக வேட்பாளா் கா. வெற்றிச்செல்வி, கும்பகோணம் 24-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் என். சசிகுமாா் வெற்றி பெற்றனா். இந்த 3 இடங்களிலும் ஏற்கெனவே வெற்றி பெற்ற திமுக மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

திருவோணம் ஒன்றியம் அதம்பை ஊராட்சி மன்றத் தலைவராக அபிராமி, திருவையாறு ஒன்றியம் வளப்பகுடி ஊராட்சி மன்றத் தலைவராக குளுந்தாயி, வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக அமுதா, திருவிடைமருதூா் ஒன்றியம் விளாங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக வேணுகோபாலன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

செய்திகள் க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/