தஞ்சை மே- 24 ,மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து, கொரோனா நோய் பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா நோய் பற்றிய தவறான தகவல்களை மக்களிடமிருந்து களையவும், அறிவியல்பூர்வமான ஆதார தகவல்களை எடுத்துரைத்து உரிய மருத்துவம் பெற மக்களுக்கு விளக்கி, தடுப்பூசி தொடர்பான அச்ச உணர்வுகளை போக்கி எவ்வித தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள் மூலம் தடுப்பூசிகள் பதிவுகளை செய்ய உதவ வேண்டும், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலில், ஊரக வளர்ச்சித்துறை பிற துறைகளில் முன் களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வீடுகள்தோறும் சென்று, மக்களின் உடல்நலம் பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

எவருக்கும் காய்ச்சல் இருமல் தொண்டை வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின், அவற்றை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாக இருக்கும் நபர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும். நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ள நோயாளிகள் வசிப்பிடம் சுற்றுப்புற பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் தினமும் சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ளவும்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் தினமும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும், மக்கள் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல் covid-19 பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவும் பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கவும் இதை வாராந்திர அறிக்கை மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.
அனைத்து ஊராட்சிகளிலும் மே மாதம் 24 ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை உள்ள 5, நாட்களிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவை மேற்கொள்ளும்போது முகக்கவசம், கையுறை இதர பொருள்களை மிகவும் சிரத்தையுடன் அப்புறப்படுத்தவும், இச் செயலில் ஈடுபடும் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் ஆன தடித்த கையுறைகள் மற்றும் முகக் கவசங்கள் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 5 மற்றும் 20 ஆம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் முறையாக சுத்தப் படுத்தவேண்டும் நாள்தோறும் குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்யவும் வேண்டும், கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் பரவாமல் தடுப்பது “தனிநபர் பொறுப்புணர்வு தரணியை வாழ வைக்கும் தன்மை கொண்டது, எனவே ஒவ்வொரு தனிநபரும் விழிப்புணர்வுடன் இருந்து நோய் பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை