தஞ்சை சூலை 01: தஞ்சாவூரில் கீழவாசல் மீன் சந்தையை 3 இடங்களில் பிரித்து நடத்த ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் நடவடிக்கை மேற்கொண்டார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியிலுள்ள மீன் சந்தை மொத்த வியாபாரம் அரசின் வழிகாட்டுதல்படியும், பொதுமக்கள் நலன் கருதியும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, கரந்தையில் உள்ள தற்காலிக பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

கீழவாசல் மாநகராட்சி மீன் சந்தை பகுதியில் சில்லறை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், ஜூன் 27 ஆம் தேதி அப்பகுதியிலுள்ள சாலையில் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வந்ததையும், அங்கு பொதுமக்கள் அதிகமான அளவில் கூட்டம் கூடி இருந்ததும் ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் காவல் துறை மூலம் அப்பகுதியில் கூடியிருந்த கூட்டம் கலைக்கப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு அப்பகுதியை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, அப்பகுதி சில்லறை வியாபாரிகளின் கோரிக்கையின்படி, திலகா் திடல், கீழ் அலங்கத்தில் வெள்ளைப் பிள்ளையாா் கோயில் முதல் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வரை, கொடிமரத்து மூலை முதல் வெள்ளை பிள்ளையாா் கோயில் வரை ஆகிய மூன்று இடங்களில் பிரித்து வியாபாரம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்