தஞ்சாவூர் சூலை 31: தஞ்சை மாவட்ட ஒரத்தநாடு ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

ஒரத்தநாடு அருகே மேலஉளூர் ஊராட்சியில் நவநீதகிருஷ்ணன் என்பவருக்கு குறுவை சாகுபடி செய்வதற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் விதைகள், ரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார்.

கடந்த ஆண்டு மகசூலை கேட்ட இந்த ஆண்டும் அதற்கு குறைவில்லாமல் கூடுதல் மகசூல் பெறும் வகையில் பணிகளை மேற்கொள்ள விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து வருவாய் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலஉளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் உரக்கிடங்கை பார்வையிட்டு ரசாயன உரம் இருப்பும் குறித்தும் அதற்குரிய பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

மேலும் அங்குள்ள நியாய விலைக் கடையை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்க கூடிய அரிசியின் தரத்தையும், பதிவேட்டில் உள்ள இருப்பு முழுமையாக உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலஉளூர் ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை பார்வையிட்டார்.

தொடர்ந்து ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் காமராஜர் காலனியில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் 375 வீடுகளுக்கு புதிய குழாய் இணைப்புகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மேலஉளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட அவர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ள தாய்சேய் நல அட்டையை பார்வையிட்டு அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து முறையாக அலுவலர்கள் வீடுகளுக்கு வந்து கண்காணிக்கிறார்களா? என கேட்டறிந்தார்.

மருந்து கிடங்கில் மருந்து இருப்பு குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் தொற்றுநோய்க்கு தேவையான தடுப்பு மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள மருத்துவர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ஒரத்தநாடு ஒன்றியகுழு தலைவர் பார்வதி சிவசங்கர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம், வட்டார மருத்துவர் இந்திரா, வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், தாசில்தார் சீமான் மற்றும் பலர் உடன் சென்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/