தஞ்சாவூர் ஆக: 19- தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கு 3 மாதத்துக்குள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கூறினார்.


குப்பைக்கிடங்கு தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை, தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது அவர்கள் மாநகராட்சியின் நிதி ஆதாரத்தை குறுகிய காலத்தில் பெருக்கியதோடு, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதற்கும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், நகரமைப்பு உதவி திட்ட அலுவலர் ராஜசேகரன், மேலாளர் கிளமெண்ட் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.


குப்பைக்கிடங்கிற்கு தீர்வு அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறியதாவது:-


தஞ்சை மாநகரில் முக்கிய இடங்களை அழகுபடுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தஞ்சை பீரங்கி மேடு வரலாற்று சிறப்பு மிக்க இடம். அந்த இடத்தை சுற்றிலும் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு உரிய வசதிகள் செய்யப்படும்.


தஞ்சை மாநகரில் உள்ள ஜெபமாலைபுரம் குப்பைக்கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது குப்பைகளில் இருந்து நுண்உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகி்ன்றன.

அதன்படி குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகளும் 3 மாதத்துக்குள் உரமாக தயார் செய்யப்பட்டு குப்பைகள் இல்லாத இடமாக மாற்றப்படும். மேலும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்களே நேரடியாக வந்து சேகரித்து, அதனை உடனுக்குடன் உரமாக சேரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


இதில் தஞ்சை குடிமக்கள் மன்ற துணைத்தலைவர் டாக்டர் வரதராஜன், கவின் மிகு இயக்க தலைவர் ராதிகா, தொழில் வர்த்தக கழக தலைவர் பாலசுந்தரம், இந்திய மருத்துவசங்க தலைவர் டாக்டர் சசிராஜ், பட்டய கணக்காளர் சங்க தலைவர் தமிழய்யா, அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு தலைவர் பூவலிங்கம், செயலாளர் பழனிவேல், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஜெயச்சந்திரன், விஜய்ஆனந்த், தருமசரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/