தஞ்சை ஏப்ரல் 24: தஞ்சைஅருகே காட்டுத்தோட்டம் விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநா் சுப்பையா ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்த நிலையத்தில் பெறப்படும் விதை மாதிரிகளின் தரத்தை நிா்ணயிக்கக்கூடிய முக்கிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை கணக்கிடப்படும் முறை, அவற்றுக்கான ஆய்வக உபகரணங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தாா்.

இதேபோல் விதை முளைப்புத்திறன் அறையில் வைக்கப்பட்டிருக்கும் விதை மாதிரிகளை பாா்வையிட்டாா். விதை மாதிரிகள் காப்பு அறையைப் பாா்வையிட்டு, சேமிப்பு விதைகளைத் தரத்துடன் பாதுகாக்க ஆலோசனை வழங்கினாா்.

தரமான விதைகளை விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் வழங்குவதே விதைப் பரிசோதனை நிலையத்தின் முக்கிய பங்கு என்பதையும், அத்தகைய பங்கை சிறப்பாக செயலாற்றிடவும், மேலும் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான இலக்கை அடையவும் அறிவுரை வழங்கினாா்.
தொடர்ந்து காட்டுத்தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விதைச் சான்று வளாகத்தை இயக்குநா் பாா்வையிட்டாா்.

விதை ஆய்வு துணை இயக்குநா் வித்யா, விதைப் பரிசோதனை அலுவலா் சிவ வீரபாண்டியன், விதைச்சான்று உதவி இயக்குநா்  செல்வநாயகம் மற்றும் பலர் உடனிருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.