தஞ்சாவூர், மார்ச்.17 காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்ட ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக மாநில பாஜக அரசை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு துணை போகாமல், சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் வியாழக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்துப் பின் வரும் கருத்துகளை கூறினார்.
“கர்நாடக மாநில பி.ஜே.பி., அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, சட்டவிரோதமான முறையில், நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதைக் கண்டித்தும், இந்திய ஒன்றிய பிஜேபி அரசாங்கம் பாரபட்சமான முறையில், கர்நாடக மாநில அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்வதை கண்டித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு விரோதமாகவும், நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராகவும், கர்நாடக மாநில பிஜேபி அரசாங்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மேகதாது அணை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்ட விரோதமானது.
அரசியல் சாசனத்தை மதிக்க மாட்டோம் உச்சநீதிமன்றத்தை மதிக்க மாட்டோம். மத்தியில் எங்களுடைய அரசாங்கம் இருக்கிறது, நாங்கள் அணையை கட்டியே தீருவோம் என்கிற வகையில் அடாவடித்தனமாக கர்நாடக மாநில அமைச்சர்கள் பேசிக்கொண்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், இன்றைக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை நாங்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்கள், அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து மேகதாது அணை கட்டும் முயற்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம்.
அது ஒன்றுதான் தமிழ்நாட்டின் நீராதாரத்தை, பாசன உரிமையை பாதுகாப்பதற்கான அடிப்படையான விஷயம். எனவே, எந்தவிதமான வேறுபாடுமின்றி, அனைத்து கட்சிகளும், அனைத்து விவசாயிகள் சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன்னெடுத்து அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம்” என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் எம்.பழனிஅய்யா, சிஐடியு கௌரவத் தலைவர் ஆர்.மனோகரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர்
கே.அபிமன்னன், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கோவிந்தராஜ், கே.முனியாண்டி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.சுரேஷ் குமார், என்.சிவகுரு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.சரவணன், என்.குருசாமி, எம்.மாலதி, மாநகரச் செயலாளர் வடிவேலன், ஒன்றியச் செயலாளர்கள் பூதலூர் தெற்கு சி.பாஸ்கர், அம்மாபேட்டை நம்பிராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.தமிழரசன், மோகன்தாஸ்,
சௌந்தரராஜன், பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காவிரி டெல்டாவை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பேராவூரணி
பேராவூரணி தந்தை பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க பொறுப்பாளர் வீ.கருப்பையா தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார்.
விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் சி.ஆர்.சிதம்பரம், ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஏ.வி.குமாரசாமி, கோ.ராமசாமி, சம்பத், சித.திருவேங்கடம், த.ஜேம்ஸ், எஸ்.ஜகுபர்அலி, நாகேந்திரன், துரை, சுப்பிரமணியன், நாகநாதன், கார்மேகம், முருகையன், கந்தசாமி மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/