தஞ்சாவூர் அக்.28- தமிழகஅரசு சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்டம் இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. நீட் விலக்கு சிறப்புசட்ட கோப்பு ஆளுநரின் பரிந்துரைக்காகவும், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காகவும் காத்துக்கிடக்கிறது. ஏற்கனவே குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ஏழுதமிழர் விடுதலை குறித்து இதுவரை பதில் ஏதும் இல்லை.

உயர் சாதியினரின் பத்துசதவிகித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு அவசரமாக ஒப்புதல் தரும் குடியரசுத்தலைவர் தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்டம், ஈழத்தமிழர் விடுதலை ஆகியவற்றில் பாரமுகமாய் இருப்பது தமிழ்நாட்டு மக்களை உதாசீனம் செய்வதாகவே உள்ளது.

குடியரசுதலைவர் மற்றும் ஒன்றிய அரசின் மாநில அரசு விரோதி போக்கைகண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழக தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரத்தின் மாநகர செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்றது.

பாசிச மோடி அரசின் தலைமையில் அமைந்துள்ள ஆட்சிதான் நீட் தேர்வை கட்டாயமாக்கியது மருத்துவத்தில் ஊழல் குற்றங்களை ஒழிக்க  நீட் தேர்வு தான் சரியான தீர்வு என்று கூறி நீட் தேர்வு மாநில அரசுகளுக்கு திணிக்கப்பட்டது.
நடைமுறையில் நீட் கோச்சிங் என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்கள்,கோச்சிங் சென்டர் பல்லாயிரம் கோடி கொள்ளை அடிப்பதும் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து வருகின்றனர்.

தமிழகத்திலும் மாணவர்கள் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது மாணவி அனிதாவின் படுகொலையில் தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாநில உரிமைகளை மதித்து தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும், இல்லையேல் குடியரசு தலைவர் பதவி விலகவேண்டும் என்ழற கோரிக்கை முழக்கம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தினை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சு.பழனிராஜன் துவக்கி வைத்தார். மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் கோரிக்கைகளை விளக்கி நிறைவுரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழக மாநகரசெயலாளர் ராவணன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் எம்.பி.நாத்திகன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, திருச்சி என். மணி, சிபிஐஎம் மருத்துவக்கல்லூரி பகுதி செயலாளர் ராஜ ஜெயபிரகாஷ், எழுத்தாளர் தஞ்சை சாம்பான், பேராசிரியர் ஜான், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னார்கள். முடிவில் மக்கள் அதிகாரம் நிர்வாகி அருள் நன்றி கூறினார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/