தஞ்சை ஏப்ரல் 18 தமிழகத்தில் உள்ள கோயில்களை, தமிழக அரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என ஈஷா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘கோயில் அடிமை நிறுத்து’ என்ற பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார். 

இதனால் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், கோவில்கள் தனிநபர் கட்டுப்பாட்டில் சென்று, அவர்கள் ஆளுமையில் சென்று பாதிப்பு ஏற்படும் எனவும் கருத்துக்கள் எழுந்துள்ளது.

எனவே தமிழகத்தில் மதப்பதற்றத்தை உருவாக்கும், ஜக்கி வாசுதேவின், கோயில் அடிமை நிறுத்து இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்து மத வழிபாட்டு தலங்களை ஆர்எஸ்எஸ் கூடாராமாக்கத் துடிக்கும் ஈஷா யோகா மையத்தை தடை செய்ய வேண்டும். அந்த அமைப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். கோயில்களிலிருந்து மதவெறி பாசிசக் கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில், தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.  மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன் தொடங்கி வைத்தார். 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி நிறைவுரையாற்றினார். 

திராவிடர் கழகம் சி.அமர்சிங், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ச.சொக்கா ரவி, சிபிஎம்எல் மக்கள் விடுதலை இரா.அருணாச்சலம், தமிழ்த் தேசிய பேரியக்கம் நா.வைகறை, தமிழ்த் தேச மக்கள் முன்னணி அருண்சோரி,  சிபிஐ(எம்எல்) லிபரேசன் கே.ராஜன், தமிழக உழவர் இயக்கம் கோ.திருநாவுக்கரசு,  வழக்குரைஞர்கள் சி.சந்திரகுமார், வெ.ஜீவகுமார், ஏஐடியுசி ஆர்.தில்லைவனம், மக்கள் கலை இலக்கியக் கழகம் இராவணன், ஆதித் தமிழர் பேரவை எம்.பி.நாத்திகன், விசிறி சாமியார் மற்றும் சமூக – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.