தஞ்சை மே.14– கொரோனா ஊரடங்கு காலத்தில், நுண்கடன் நிதி நிறுவனங்கள், பொதுமக்களிடம் கடனை வசூலிப்பதை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவிடம் வியாழக்கிழமை அன்று கோரிக்கை மனுவை அளித்தார். அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது.
“தஞ்சை மாவட்டத்தில் விவசாய பெண் தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு பெண் விவசாயிகள், நுண் கடன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர். தற்போது இந்த நிறுவனங்கள் கட்டாயமாக வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழு கூட்டம் என்ற பெயரில், 20 பெண்களை வட்ட வடிவில் தனிநபர் சமூக இடைவெளியின்றி அமர வைத்து மணிக்கணக்கில் கூட்டம் நடத்துகின்றனர். இதனால் நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், ஊரடங்கு காரணமாக, வேலை இல்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தொகையை கட்டச் சொல்லி பெண்களை நிர்பந்திக்கின்றனர். எனவே இத்தகைய குழு கூட்டங்களுக்கு தடை விதித்தும், கடன் தொகை வசூலை தள்ளி வைத்தும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
செய்தி க,சசிகுமார் நிருபர்.
தஞ்சை