தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை: கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்:

தஞ்சாவூர்,அக்.15-தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த
86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக  விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை  வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.இந்த நிலையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன் பெறும்
வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான
பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி,
துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகக் தருவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று  தஞ்சாவூர் கோ-ஆப்டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில்
தீபாவளி 2021 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை  தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர் மருத்துவர் மாதவி மணிவண்ணன் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கலெக்டர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 
தஞ்சாவூர் குந்தவை விற்பனை நிலையம், வைரம் விற்பனை நிலையம், கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு விற்பனை நிலையம், பட்டுக்கோட்டை விற்பனை நிலையம் ஆகிய நான்கு விற்பனை நிலையங்களில்  கடந்த தீபாவளி- 2020 பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில்
ரூ.738.50 லட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2021-க்கு ரூ.2000.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளியில் ரூ.132.23 லட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு தீபாவளி- 2021க்கு ரூ.300.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கனவு நனவு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 11-வது மற்றும் 12- வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. 

பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக்கியமாக இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி , முதுநிலை மேலாளர் (வடிவமைப்பு மற்றும உற்பத்தி) ரா.சீனிவாசன், துணை மண்டல மேலாளர் (நிர்வாகம்)
மு.அன்பழகன், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ரெ.சுரேஷ் செய்திருந்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/