தஞ்சை சூன் 14: தஞ்சாவூா் மீன் சந்தையில் சமூக இடைவெளியின்றி மக்கள் திரண்டதை அடுத்து அதிகாரிகள் அந்த சந்தையை மூடினர். இதனால் பரபரப்பு எழுந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த பிறகு மே மாதத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது, தஞ்சாவூா் கீழவாசலிலுள்ள மீன் சந்தையில் மொத்த வணிகத்தைத் தவிர, சில்லறை வணிகக் கடைகள் கரந்தை தற்காலிகப் பழைய பேருந்து நிலையத்துக்கு மே 20ம் தேதி மாற்றம் செய்யப்பட்டன.

அதன் பிறகு, தமிழகத்தில் மே 24ம் தேதி முதல் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் நடைமுறைக்கு வந்தது. அப்போது, இறைச்சிக் கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால், அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. மீண்டும் ஜூன் 7 ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தைத் தமிழக அரசு அறிவித்தபோது, இறைச்சிக் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, கீழவாசல் மீன் சந்தையும் திறக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் நே;று மீன் இறைச்சி வாங்க இச்சந்தைக்கு ஏராளமானோர் திரண்டனா். சமூக இடைவெளி காற்றில் பறந்தது. மக்கள் பெரும்பாலும் நெருக்கமாகவே நின்றனா். கூட்டத்தில் பலரும் பாதுகாப்பற்ற முறையில் முகக்கவசம் அணிந்திருந்தனா்.

மாவட்டத்தில் தொற்று குறைந்து வரும் நிலையில், இச்சந்தையில் பொதுமுடக்க விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாததால், கொரோனா பரவக்கூடிய அச்சநிலை உள்ளதாகப் புகார்கள் எழுந்தன. உடன் மாநகராட்சி அலுவலா்கள் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டு இந்த சந்தையை மூடினர். பின்னர் இதன் வாயிலில் தகரங்கள் வைத்து அடைத்தனர். இதற்கு பதிலாக சில்லறை வணிகக் கடைகள் தென் கீழ் அலங்கத்தில் அகழிக்கரை உள்பட இரு இடங்களில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யுமாறு வணிகா்களிடம் மாநகராட்சி அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்